குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.
Mpox வைரஸ் தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. இதற்கமைய சுவீடனில் குரங்கம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவீடன் பொதுச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குரங்கம்மை தொற்றினால் இதுவரை 461 மரணங்கள் பதிவாகியுள்ளன.
எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான சாத்தியம் நிலவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments