header ads

வெளிநாட்டு வீரர்களுக்கு இனி அது நடக்காது - புதிய ஐபிஎல் விதியை பற்றி சொன்ன அஸ்வின்

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் குறுக்கு வழியை பயன்படுத்தி அதிக சம்பளம் பெற்று வருவதாகவும், அது இனி நடக்காது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் புதிய விதி ஒன்று அமுல்படுத்தப்பட போவதாகவும், அதனால் இனி வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தைப் பயன்படுத்தி அதிகமாக சம்பாதிக்கலாம் என கனவு காண முடியாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அப்போது நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 20க்கும் மேற்பட்ட வீரர்களை வாங்குவார்கள். அதனால் ஒரு வீரருக்கு கிடைக்கக்கூடிய சம்பளம் என்பது சற்று குறைவாகவே இருக்கும்.

ஏலத்தில் அதிக வீரர்களை வாங்க வேண்டும் என்பதால் ஐபிஎல் அணிகள் எந்த ஒரு வீரருக்கும் ஏலத்தில் அதிகபட்ச தொகையை கேட்பதற்கு தயங்கும். தங்களிடம் உள்ள கையிருப்பை திட்டமிட்டே செலவிடுவார்கள். அதேசமயம், அடுத்த மூன்று ஐபிஎல் தொடர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடத்தப்படும் மினி ஏலத்திற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில வீரர்களை நீக்கிவிட்டு, ஏலத்தில் சில வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது.


அப்போது சில ஐபிஎல் அணிகளிடம் அதிக பணம் இருக்கும். அவை ஒரு வீரருக்கு அதிகபட்ச தொகையை ஏலம் கேட்க தயங்காது. இதை வெளிநாட்டு வீரர்கள் சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு 2024 ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கும் மற்றும் மிட்செல் ஸ்டார் 24.75 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

ஐபிஎல் வரலாற்றிலேயே 20 கோடி என்ற சம்பளத்தை கடந்த முதல் வீரர்கள் அவர்கள் இருவரும் தான். அப்போதே மெகா ஏலத்தை விட்டுவிட்டு மினி ஏலத்தை பயன்படுத்த நினைக்கும் வெளிநாட்டு வீரர்களை தடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஸ்வின் அது பற்றி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். "தற்போது ஒரு வேடிக்கையான விதி எல்லாவற்றையும் மாற்ற உள்ளது. நான் இதை தெளிவாக சொல்கிறேன். வெளிநாட்டு வீரர்கள் இதுவரை என்ன செய்து வந்தார்கள்? மெகா ஏலத்தில் பங்கேற்க மாட்டார்கள். இன்று மெகா ஏலம் இருக்கிறது என்றால், நான் எனது ஊரில் விவசாயம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விடுவார்கள். மெகா நிலத்தில் பங்கேற்பதற்கு பதிலாக மினி ஏலத்தில் பங்கேற்பார்கள்."

"அதில் பங்கேற்பதன் மூலம் சிட்னியில் நான் வீடு கட்டுவேன், மாலத்தீவை வாங்குவேன், பிஜி தீவில் ஒரு கப்பலை வாங்குவேன் என்று கிளம்பி வருவார்கள். இதுதான் மினி ஏலத்தில் இதுவரை நடந்துள்ளது. ஒரு இந்திய வீரருக்கு என்ன அதிகபட்ச விலை கொடுக்கப்படுமோ, அதுதான் இனி எந்த ஒரு வெளிநாட்டு வீரருக்கும் அதிகபட்ச சம்பளமாக இருக்கும் என்ற விதி வர உள்ளது. நீங்கள் ஏலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் வெளிநாட்டு வீரருக்கு விலை நிர்ணயம் செய்யலாம். ஆனால், இந்திய வீரர்களின் சம்பளத்தை தாண்ட முடியாது." என்றார் அஸ்வின். 

Post a Comment

0 Comments