header ads

சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் காலமானார்.

சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் (91வயது) ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் காலமானார். 

நாட்டில் விவசாய பண்ணை ஒன்றில் , கூலித்தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கி, உலக வல்லரசான ஐக்கிய சோவியத் ரஷிய குடியரசின் அதிபராக உச்சம் தொட்டவர் மறைந்த மிக்கைல் கோர்பசேவ். இருபதாம் நூற்றாண்டின், தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக சோவியத் யூனியன் உருவானது. ரஷ்ய நாட்டின் தலைமையில் உக்ரைன், தஜிகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய சோவியத் ரஷ்ய குடியரசு இருந்தது.

மிகைல் கோர்பசேவ் 1931 ஆம் ஆண்டு ,மார்ச் இரண்டாம் தேதி உக்ரைனில் பிறந்த இவர் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, படிக்கும் போதே கல்லூரி தோழி ரைசா தைத்தாரென்கோவை மணந்தார். மாணவ பருவத்திலிருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றிய இவர் படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் உயர்ந்தார். சோவியத் ரஷிய அதிபராக இருந்த நிக்கித்தா குருசேவின் தீவிர ஆதரவாளர்களில் முக்கியமனவராக கோர்பசேவ் இருந்தார்.

1970 ஆம் ஆண்டில் கட்சி மற்றும் அரசு பணிகளின் பிராந்திய அளவிலான செயலாளராக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு தேசிய அளவில் ஆட்சியிலும்,கட்சியிலும் முக்கிய பொறுப்புக்கு நியமனம் பெற்று கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு தலைநகர் மாஸ்கோவில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.


சோவியத் அதிபராக இருந்த லியோனீது பிரெசுனேவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள், யூரி ஆந்திரோப்பொவ், கான்சுடான்டின் செர்னென்கோ ஆகிய தலைவர்களின் குறுகிய கால ஆட்சியை தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வால் மிகைல் கோர்பசேவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோவியத் ரஷ்யாவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

கருத்தியல் ரீதியாக, கோர்பசேவ் தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990களின் முற்பகுதியில் ஜனநாயகத்தை நோக்கி பயணித்தார் .அரசில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். சோவியத் யூனியனின் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் விநியோகப் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் கோர்பசேவ் தொடங்கினார்.

இவரது ஆட்சியில் பத்திரிகை மற்றும் கலை, கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. அரசாங்க எந்திரத்தின் மீதான கட்சி கட்டுப்பாட்டை குறைத்து, தீவிர சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் அரசின் தீவிர எதிர்ப்பாளர்களையும் விடுவித்தார்.

ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஒன்றுபட்ட ஜெர்மனி உருவாக கோர்பசேவ் முக்கிய பங்காற்றினார். இவராலே உலகை அச்சுறுத்தி கொண்டிருந்த சோவியத் ரஷ்யா -அமெரிக்கா பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். . இதனால் கோர்பசேவுக்கு 1990 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கோர்பசேவ் அனுமதித்தார். இதனால் 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற கட்டமைப்பு கலைந்தது. அதில் இடம்பெற்றிருந்த உக்ரைன், லிதுவேனியா உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தன.

Post a Comment

0 Comments