header ads

தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து செல்ல முயற்சி

தமிழ், முஸ்லிம் இனத்தவர்களை நெருக்கமாக்கிக்கொள்ள முடியுமாயின் அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த செயல் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்டை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

'பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்‌ஷ அரங்கில் நேற்று (02) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுவர்களில் ஓவியங்களை வரைந்து அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனரா? என்பதை கண்டறிந்து அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதே பொதுஜன பெரமுனவிற்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும் எனவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாம் எவ்வளவு ஒடுக்கப்பட்டாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்தோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், போராட்டம் நடத்தி, வேலைநிறுத்தப் பேரணிகளை நடத்தி மக்களை இருளில் மூழ்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் பொறுப்புள்ள கட்சியாக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர். மேலும், எந்த இடையூறுகள் வந்தாலும் மக்களை கைவிட்டு ஓடவில்லை. பயம், பதட்டத்துடன் முடிவுகளை எடுக்கவில்லை. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இப்பயணத்தை மேற்கொண்டோம். அந்த வரலாற்றை மனதில் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

இன்று, விவசாயிகள் போராட்டங்கள் இவ்வளவு தீவிரமாக இழுத்தடிக்கப்பட்டதும் அவர்கள் மத்தியில் வேலை செய்யாமையினாலேயே ஆகும். அம்மக்களின் கோரிக்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அரசியலில் இருந்து ஒதுங்க ஒதுங்க, நாம் தோற்கடித்த சக்திகள், சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, பெரும் குழப்பத்தை உருவாக்க, மக்களிடையே ஊடுருவி வருகின்றனர். அந்தவகையில் இந்த நாட்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஸ்தாபிக்க வேண்டுமாயின் ஒரு கட்சியாக அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற போதும் மக்கள் மத்தியில் அரசியலில் ஈடுபடுவது அவசியமாகும்.

எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்து நான் நன்கு பழக்கப்பட்டுள்ளேன். இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுகளுக்கும் அரசாங்கத்தையே மக்கள் குறைகூறுவர்.

மக்கள் குறை கூறலாம், உருவ பொம்மைகளை எரிக்கலாம். ஆனாலும் நாம் மக்கள் மத்திக்கு செல்ல வேண்டும்.


சர்வதேச சமூகத்துடன் மோதி, எமக்கு வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இவற்றைச் செய்தோம். நாம் செய்தவற்றின் பலன்களே பல வேடங்களில் நம் முன் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலுள்ள அரசியலை தேசத்திற்கு புரிய வைக்கும் பொறுப்பை ஒரு கட்சியாக நாம் ஏற்க வேண்டும்.நாட்டின் சுதந்திரத்திற்காக கடந்த காலத்தில் செய்த அர்ப்பணிப்பு பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அது ஏன்? ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் இனவாத கோரிக்கைகளை அனுமதிக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், இவ்வாறான இனவாத அரசியல் கட்சிகளின் தாக்கத்திற்கு ஆளாகாமல் ஜனாதிபதி ஒருவரை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. அது தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து விலகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதல்ல. தமிழ், முஸ்லிம் இனத்தவருடன் மேலும் நெருக்கமாக்க முடிந்தால், அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த காரியம்.

அத்துடன் இனவாத தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தாளத்திற்கு ஆடாமல் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை எம்மால் பெற முடிந்தது. 70 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு ஆசனத்திற்கு கீழே இறக்க மொட்டினால் முடிந்தது, என தெரிவித்தார்.




Post a Comment

0 Comments