கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், குருவிட்டை – தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென மரபணு பரிசோதனையில் (DNA) உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட போதிலும், தலையின்றி சடலம் காணப்பட்டமையால் சந்தேகத்திற்கிடமின்றி ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு மாதிரிகள், அவரின் தாய் மற்றும் சகோதரர்களின் மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் மறுநாள் மொனராகலை படல்கும்புற பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments