ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து முதன் முறையாக கத்தோலிக்க பெண் ஒருவரின் சடலமும் சனிக்கிழமை (13) நல்லடக்கம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இது இன ஐக்கியத்திற்கு சிறந்தசான்றாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்ற ரீதியிலே சனிக்கிழமை கத்தோலிக்கப் பெண்ணின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜா-எலையைச் சேர்ந்த 60வயதான அந்தப் பெண்மணி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பயனின்றி மார்ச் 08 ஆம் திகதி மரணமடைந்தார்.
அவரின் உடல் சனிக்கிழமை (13) ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுவரும் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா பூதவுடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments