மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக, தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அத்தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தனது வேட்புமனுவை நேற்று முன்தினம் (15) தாக்கல் செய்தார். வேட்பு மனு படிவத்துடன் தனது சொத்து விவரம் குறித்த அறிக்கையும் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
அதன்படி, கமல்ஹாசனுக்கு அசையா சொத்துகள் (இந்திய ரூபாய் மதிப்பில்) ரூ. 131 கோடியே 84 லட்சத்து 45ஆயிரம் எனவும், அசையும் சொத்துகள் ரூ. 45 கோடியே 9லட்சத்து 1,476 என மொத்தம் ரூ.176 கோடியே 93லட்சத்து 46ஆயிரத்து 476மதிப்பில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ரூ.49 கோடியே 50லட்சத்து 11ஆயிரம் 10 கடன் உள்ளதாகவும், கடந்தாண்டு ரூ.22கோடி வருவாய் கிடைத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் குறித்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
"சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறேன். எனக்கு 66வயது ஆகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு ஓட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள என் மீது 3வழக்குகள் நிலுவையில் உள்ளன.
என்னிடம் கையிருப்பு ரொக்கம் ஒட்டுமொத்தமாக ரூ.2கோடியே 43லட்சத்து 84ஆயிரத்து 563தொகை உள்ளது. எனக்கு சொந்தமாக 98லட்சத்து 73ஆயிரத்து 444ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார், 2கோடியே 70லட்சத்து 66ஆயிரத்து 198ரூபாய் மதிப்புள்ள லான்சர் கார் உள்ளது.
கொடைக்கானலில் 35.59ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.17.79கோடி ஆகும். ஆழ்வார்பேட்டையில் ரூ.2.50கோடி மதிப்பில் மூன்று பிளாட்கள், ரங்கநாதன் அவென்யூவில் ரூ.17கோடி மதிப்பில் பிளாட் உள்ளது. லண்டனில் டவர் பிரிட்ஜ் சாலையில் ரூ.2.50கோடி மதிப்பில் குடியிருப்பு உள்ளது. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 9,002சதுரடியில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு ரூ.24.84கோடி ஆகும். ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள 23ஆயிரம் சதுரடி பரப்பளவிலான கட்டிடத்தின் மதிப்பு ரூ.45.18கோடி ஆகும். சென்னையின் உத்தண்டி கிராமம், சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் அசையா சொத்துகள் உள்ளன". என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments